அவள் தாய் திருநாட்டை கட்டியெழுப்ப வருகிறாள்
- Seevali Surendran
- Mar 21
- 1 min read

மனித வரலாறே! நீ தலைகுனிந்து நிற்கவேண்டும்.
பெண்களின் துயரங்களை நீண்ட காலமாய் பார்த்துக்கொண்டு
சலனமற்றுக்கிடப்பதற்காக!
ஓராயிரம் கோடி இரவுகளே நீங்கள் இரக்கமற்றவர்கள்! - உம்முள்
எத்தனை பெண்களின் விசும்பல்களை மறைத்துவைத்திருக்கிறீர்கள்?
பறந்து விரிந்த பார் நிலங்களே! துயரம் தாளாமல் உம்முள் மரணித்து புதையுண்ட பெண்களுக்காக ஏன் மௌனித்தீர்கள்?
உலக வரலாற்றினை திருத்தி எழுதிய மாபெரும் அறிவாளர்களே,
பெண்ணின துயர் அறியாமலேயே உமது அறிவு முழுமை பெற்றதா?
ஊழிக்காலம் முதல் உறுதியாய் நிற்கும் பாறைகளே, உங்களைவிட அவள் உறுதியானவள் என்பதை அறிவீரோ?
அவள் தீரா நதியானவள்!
கடலை குடிக்கும் தாகம் அந்த நதியினுடையது!
வறண்டு கிடைக்கும் அடிமை வாதிகளின் மனங்களில்லெலாம்
கரை புரண்டு ஓடுகிறாள்.
அவர் மனக்கரைகளை எல்லாம் கழுவுகிறாள்.
பெண் பலவீனமானவள் அல்ல - அவளே பூரணசக்தி
கல்வியறிவில்லாதவள் அல்ல. கற்பிக்கத்தெரிந்தவள்
பின்வாங்குபவள் அல்ல. ஊக்குவிக்கத் தெரிந்தவள்
பயந்தவள் அல்ல. பார் வெல்ல துணிந்தவள்.
மறைக்கப்பட வேண்டியவள் அல்ல. மதிக்கப்படவேண்டியவள்.
பெண் என்றும் சாபமல்ல அவளே வரமானவள்!
செவிசாய்க்கப்படாத அவள் விசும்பல்கள் இன்று உலக அரங்கில் உற்று நோக்கப்படுகின்றன.
மாபெரும் மண்டபங்களில் அவள் குரல் கர்ஜிக்கிறது.
அவளது ஆணையில் உலகம் நல்வழி செல்கிறது!
அவள் சேமித்து வைத்திருக்கும் சக்தியை இனி
இந்த உலகம் புறக்கணிக்க முடியாது.
இப்போது அவள் புறப்படுகிறாள் எஞ்சியிருக்கும்
மாசுகளை தூயமையாக்க!
இனி அவள் தான் வறுமையை, இயலாமையை, மூடமையை, அவநம்பிக்கையை சுத்தம் செய்து,
இன்பமும் வளமும் கொழிக்கும் - எம்
தாய் திருநாட்டை கட்டியெழுப்ப வருகிறாள்.
எம் தேசத்தின் ஒவ்வொரு இதயத்திலும்,
பெண்களின் பலம் இனி ஒருபோதும் குறையாது.
ความคิดเห็น